முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளி மாணவர்களுக்கென்றே தனியாக கல்வி தொலைக்காட்சி தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது. சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்விக்கான புதிய தொலைக்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று திகழ்கிறது. தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு பின்னர் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம் புதுமையான முறையில் இருப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர். அதே போல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை போலவே பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக கல்விக்காக தனித்தொலைக்காட்சி நாளை சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த தொலைக்காட்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து ஒலிபரப்பப்பாகும். இதன் சிறப்பு அதிகாரியாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனர் பொன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் கல்விக்கென தனியாக ஒரு தொலைக்காட்சியை வரும் 26-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கல்வி தொலைக்காட்சியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான கற்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும், பாடத்தினை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நீட் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு திறன்வாய்ந்த ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர். மாணவர்களுக்கான பயனுள்ள பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தகவல்கள் ஒளிபரப்பப்படும் என்றும் கல்வித்துறையில் அரசு சார்ந்த திட்டங்கள் பயன்பாடுகள் குறித்து கல்வி சார்ந்த அரசு நிகழ்ச்சிகள் குறித்தும் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கென்றே நூறு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும் தனி அதிகாரி பொன்குமார் தெரிவித்தார். 

இதற்கான விழா நாளை காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் தொடங்குகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தொடங்கி வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், கேபிள் டி.வி. கார்ப்பரேஷனின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத் தலைவர் பா. வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து