முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் அளிப்பதற்கு அவசர சட்டம் : கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது, சரக்கு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பது போன்றவற்றுக்கு கால அவகாசம் அளிப்பதற்கு அவசர சட்டத்தை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 

கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் வணிகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் சில தளர்வுகளை அளிப்பது இப்போது அவசியமாகிறது.

தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டப்படி வணிகர்கள் பல்வேறு கணக்குகளை உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நிலுவைத் தொகைகள், வெளியிடங்களுக்கு வினியோகிக்கப்பட்ட சரக்குகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது, கூடுதல் வரிப் பணத்தை திருப்பி கேட்பதற்கு விண்ணப்பிப்பது, மேல்முறையீடு விண்ணப்பம் உள்பட பல நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், இவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான தளர்வுக்கு ஏதுவாக தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தை திருத்தி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டம் (வாட்), தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச் சட்டம், ஆடம்பர வரி சட்டம் மற்றும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு மற்றும் தமிழ்நாடு வரிவிதிப்பு சட்டத்தின் காலக்கெடு தொடர்பான விதிகளை தளர்த்துவதற்கான திருத்தத்தை ஏற்படுத்தும் அவசர சட்டத்தையும் கவர்னர் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் பிறப்பித்தல், அறிவிக்கை வெளியிடுதல், செயல்முறைகளை நிறைவு செய்தல், வழக்கின் உத்தரவை ஆணையமோ அல்லது தீர்ப்பாயமோ வெளியிடுதல், மேல்முறையீட்டுக்கு விண்ணப்பித்தல், பதில் மனு தாக்கல் செய்தல் போன்றவற்றுக்கான காலக்கெடுவை தளர்த்தி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து