முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு இன்று முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை: சுகாதாரத்துறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்திற்கு ஜூன் மாத இறுதிக்குள் 42.58 தடுப்பூசிகள் வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசின் கொள்முதல் திட்டத்தின் கீழும் தடுப்பூசிகள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது வரை 88,53,690 டோஸ் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தமிழக அரசின் நேரடி தடுப்பூசி கொள்முதல் திட்டத்தின் கீழ் 13,10,270 டோஸ்கள் உள்பட மொத்தம் 1,01,63,960 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

இதில் தற்போது வரை 97,35,420 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வர இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14.74 லட்சம் தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 25.84 லட்சம் தடுப்பூசிகள் என மொத்தமாக தமிழகத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகள், ஜூலை இறுதிக்குள் பல்வேறு கட்டங்களாக வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழக அரசின் சார்பில் 39.05 கோடி செலவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆகிய இரு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு குறையும் என்றும் முதற்கட்டமாக இன்று 63 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து