முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டம் தயார்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

மக்களின் வசதிக்காக ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

எங்கள் மனதில் குடியிருக்கும் ஊராகத்தான் ஈரோட்டை நாங்கள் எப்போதும் மதித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோட்டில், தி.மு.க. ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நடக்கின்ற முதல் விழாவில் இந்த காணொலிக் காட்சியின் மூலமாக  கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.  

மொத்தம் 66 பணிகள் ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்று, தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.  இவை மொத்தம் 104 கோடி ரூபாய் மதிப்பிலானவை ஆகும். அதே போல 45 கோடி ரூபாய் மதிப்பிலான 365 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மலைவாழ் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலங்காடு வரையிலான சாலையைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.  

தாளவாடி வட்டாரம் பையணாபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 40 ஆயிரத்து 95 பயனாளிகளுக்கு ரூ. 2,0976.71 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளது.    

அனைவருக்கும் முறையாக அந்த உதவிகள் சென்றடைந்தா என்று அதிகாரிகள் கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும், அதில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். 

 பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏற்கனவே 550 எண்ணிக்கையில் படுக்கைகள் இருந்தன. இதனை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, ரோட்டரி சங்கத்தின் மூலம் 401 படுக்கைகளும், ஒளிரும் ஈரோடு தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு 180 படுக்கைகளும், Fiscal மூலம் 80 படுக்கைகளும், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் கூடுதலாக 100 படுக்கைகளும் உருவாக்கப்பட்டு, தற்பொழுது 1,311 எண்ணிக்கையில் பிரமாண்டமான இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. 

அதேபோல் - பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவிட் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 401 படுக்கைகளுடன் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 நாட்களில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

ஈரோடு மாநகராட்சி 2008 முதல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2011 முதல் விரிவடைந்த மாநகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.  109.52 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாநகராட்சி மக்களுடைய வசதிக்காக மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது.  

இந்தத் திட்ட அறிக்கையில், பெருந்துறையில் ஒரு பேருந்து நிலையமும், ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் இரண்டு பேருந்து நிலையங்கள் என்று மூன்று பேருந்து நிலையங்கள் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.  சோலார் பகுதியில் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கையில் இருக்கிறது.  இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், பழனி, வெள்ளக்கோவில் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

சத்தி சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி, கோவை, திருப்பூர், ஊட்டி மார்க்கம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. 

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியானது 1954-ல் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்பு பதினொன்றும், முதுநிலைப் பட்ட வகுப்பு மூன்றும் இருக்கிறது. 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியானது, அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 1998-ம் ஆண்டு முதல் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை பாதுகாவலராகக் கொண்டு, இப்போது செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரி ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதை நிறைவேதற்றக்கூடிய வகையில், இந்தக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து