முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி: குஜராத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      விளையாட்டு
Bangalore 2022-05-20

Source: provided

மும்பை : விராட் கோலி, மேக்ஸ்வெல்  அதிரடியில் குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு அணி. அதிரடியாக ஆடிய விராட் கோலி 73 ரன்களை குவித்தார். இதன் மூலம் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

குஜராத் பேட்டிங்...

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்னும், டேவிட் மில்லர் 34 ரன்னும், விரித்திமான் சஹா 31 ரன்னும் எடுத்தனர்.

169 ரன்கள் இலக்கு...

பெங்களூரு சார்பில் ஹேசிவுட் 2 விக்கெட், மேக்ஸ்வெல், ஹசாரங்கா தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர். இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடினர். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார். அணியின் எண்ணிக்கை 115 ஆக இருந்தபோது டூ பிளசிஸ் 44 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து 73 ரன்னில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

பிளேஆப் வாய்ப்பு...

அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 40 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.  இறுதியில், பெங்களூரு அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது. 

கோலிக்கு டூபிளெசிஸ் பாராட்டு

வெற்றிக்கு பின் பெங்களூர் அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறுகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் நாங்கள் விரும்பியபடி எங்களது ஆட்டம் அமையவில்லை. ஆனாலும் அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது முக்கியம். வலை பயிற்சியின் போது கோலி கடினமாக உழைத்தார். இப்போட்டியில் அவருடன் மற்றொரு முனையில் இருந்து, அவரது ஷாட்களை பாராட்டி, அவருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருந்தேன். ரக்பி போட்டியில் ஆடுவது போல அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து