முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபடி போட்டியில் சிறப்பு கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும் : பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2022      இந்தியா
Modi-2022 12 20

கபடி போன்ற இந்திய விளையாட்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க. பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அந்த கூட்டத்தில் தினை மற்றும் விளையாட்டுகளுடன் தொடர்புடைய ஆலோசனைகள் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "மத்திய அரசின் வேண்டுகோளின் பேரில் 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. ஊட்டசத்து அதிகம் உள்ள தானியங்கள் மக்களின் விருப்பமான உணவாக மாற்ற வேண்டும்.

தற்போது இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தினை உணவு வகைகள் மெனுவில் இடம்பெறும். அங்கன்வாடிகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் அரசு ஆகியவற்றிலும் திணை பயன்படுத்தலாம்.

எம்.பி.க்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினை பொருட்களை பயன்படுத்தலாம். இந்திய விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் மேலானோர் சிறு விவசாயிகள் என்ற பிரிவில் உள்ளதால், இந்த தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது அவர்களுக்கு நிதி உதவியாக இருக்கும். தற்செயலாக, இன்று (நேற்று) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் மதிய உணவை வழங்குகிறது. அந்த மெனுவில் தினை வகைகள் இடம்பெற்றுள்ளன.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்பது கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.வின் முயற்சியாகும். கபடி போன்ற இந்திய விளையாட்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று எம்.பி.க்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து