முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை காவல் ஆணையர் மீதான நடவடிக்கைக்கு தடை மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      தமிழகம்
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற கருத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை டிசம்பர் 28ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த பிறகு பாலியல் விவகாரம் தொடர்பாகவும் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக விசாரிக்க சினேகா பிரியா, அய்மன் ஜமால் மற்றும் பிருந்தா உள்ளிட்ட மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பதாக உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கடந்த 9-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.வி நாகரத்தினா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மாணவி தரப்புக்காகவே உள்ளதாகவும், அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என உறுதி அளித்தது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், காவல் ஆணையர் மீது தெரிவித்த கருத்தை மட்டும் நீக்க கோருவதாக வாதம் முன் வைத்தனர்.

அதற்கு நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது? மாணவியின் விவரம் தற்போதும் இணையத்தில் உள்ளதா? மற்றும் சமூக வலைதளத்தில் உள்ளதா?, இதனை பரப்பியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியான போதும் காவல்துறை ஆணையர் செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார், இப்போது என்ன உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள்? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மாணவியை பாதுகாக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக இருந்ததாகவும் மத்திய அரசின் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாலே குறிப்பிட்ட சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்ததோடு, இதற்கு தமிழக காவல்துறையினர் என்ன செய்வார்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தகவல் ஆணையத்திடம் விவரத்தை கேட்ட போது, இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) இருந்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-வுக்கு முதல் தகவல் அறிக்கையை மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என சொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு, காவல்துறை ஆணையருக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்களுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்திய நீதிபதிகள், தமிழ்நாடு அரசு அதை கோரிக்கையாக மனுவில் வைக்கவில்லை என்பதையும் விளக்கம் அளித்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் இத்தகைய உத்தரவு ஏற்கனவே இவ்வழக்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு இடையூறாக இருக்காது என்பதையும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து