முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகம் புறக்கணிப்பு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Vijay 2023-04-13

Source: provided

சென்னை : வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2025-26-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக்குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு/ எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது. அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.

காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.  அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை. இவ்வாறு அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து