முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரும் சோக வரலாறு: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2-வது தோல்வி

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      விளையாட்டு
CSK 2025-03-31

Source: provided

 கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐ.பி.எல். தொடரில் கவுகாத்தியில் நடைபெற்ற  போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் விளையாடியது.

நிதீஷ் ராணா அதிரடி...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நிதீஷ் ராணா அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடி அவர்  போர்கள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், நிதீஷ் ராணாவுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார்.

182 ரன்கள்... 

அதிரடியில் மிரட்டிய நிதீஷ் ராணா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 81 ரன்கள் (10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் எம்.எஸ்.தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஷிம்ரான் ஹெட்மேயர் 16 பந்துகளில் 19 ரன்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. சி.எஸ்.கே. தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நிதான ஆட்டம்...

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆர்ச்சர் குடைச்சல் கொடுத்தார். முதல் ஓவர் மெய்டனாக போட ரச்சின்(0) விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். திரிபாதி - ருதுராஜ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர்.

ருதுராஜ் அரைசதம்...

ராகுல் திரிபாதி 23 ரன்களில் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேற, அவருக்குப் பின் வந்த சிவம் தூபே 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அவரும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதான ஆட்டத்தைக் கடைபிடித்த ருதுராஜ் கெய்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். தமிழக வீரர் விஜய் சங்கர் 9 ரன்களில் ஆட்டமிழக்க ருதுராஜும் 63 ரன்களில் (7 பவுண்டரி, 1 சிக்ஸர்) வீழ்ந்தார்.

ரசிகர்கள் விரக்தி...

ஜடேஜா - தோனி இருவரும் இணைந்து வெற்றி இலக்கை வேகமாக விரட்டினர். இறுதி ஓவரில் சென்னை அணிக்கு 19 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நிலை கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீச முதல் பந்தில் தோனி 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அப்போதே சென்னை ரசிகர்கள் விரக்தியடைந்தனர். முடிவில், 3 பந்துகளில் 18 ரன்கள் தேவையான நிலையில் ஜேமி ஓவர்டன் முதல் பந்தில் சிக்ஸர் விளாச சென்னை அணிக்கு வெற்றிவாய்ப்பு தெரிந்தது. இருந்தாலும், சிறப்பாகப் பந்துவீசிய சந்தீப் சர்மா 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 32 ரன்களிலும், ஓவர்டன் 9 ரன்களிலும் களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் வெற்றி...

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணியில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா, ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்த ராணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சோக வரலாறு... 

கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னை அணி 175 ரன்களைக் கடந்தது இல்லை என்ற சோகமான வரலாறு மீண்டும் நடந்துள்ளது. மேலும், கடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து