முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க மானியம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.31 - இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ.70 கோடியே 20 லட்சம் வழங்கியும், 23 வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1 கோடியே 87 லட்சம் மானியமாக வழங்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள், கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வகையில் இந்த மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கூட்டுயர்வே நாட்டுயர்வு என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப தமிழ்நாட்டின் கிராமப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், கிராமப்புற மக்களுக்கு கடன் உதவி  அளித்தல், விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், இடுபொருள், நுகர்பொருள் ஆகியவற்றை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகிய பல்வேறு இன்றியமையாப் பணிகளை கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அரும் பணியாற்றி வருகின்றன.  

பொது மக்களிடமிருந்து பெறப்படும் வைப்புத் தொகை மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியிடம் பெறப்படும் மறு நிதி ஆகியவற்றின் மூலம் பெறும் நிதி ஆதாரத்தினைக் கொண்டு,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் போன்ற பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிதி உதவி அளித்து வருகின்றன. கிராமப் புறங்களில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண்  சாரா கடன்கள் வழங்குவதே இச்சங்கங்களின் நோக்கமாகும்.    

வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிதிநிலைமை சீராக்கப்பட, சென்ற ஆண்டு  மானியமாக 82 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 662 ரூபாயை விடுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டார்.   தற்போது மாநில அரசின் பங்காக 23 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியமாக  1 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரத்து 119 ரூபாயும்,   இராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை மற்றும் மதுரை  ஆகிய நான்கு  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு  மானியமாக 70 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரத்து 191  ரூபாயும் ஆக மொத்தம் அரசு மானியமாக 72 கோடியே 8 லட்சத்து 52 ஆயிரத்து 310 ரூபாய் விடுவிக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் குறுகிய கால கடன்கள் வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணிகள் புனரமைக்கப்பட்டு, வங்கிகளின் பணிகள் மேன்மை அடைவதுடன், விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்