முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலா பெயர் பரிந்துரை

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான், ஜன. - 3 - 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பள்ளிச் சிறுமி மலாலா யூசுப்சாய் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி மாணவியான மலாலா, தனது சமூக வலைத்தளத்தில் தலிபான்களுக்கு எதிராக பெண்கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி தலிபான்களால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த மலாலா, இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக மலாலாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நார்வேயில் ஒவ்வொரு வருடமும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. முந்தய ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள், சில பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், பல நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில குறிப்பிட்ட உலகளவிலான அமைப்புகள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோபல் பரிசுக்கான பரிந்துரையைச் செய்யலாம். இவ்வாறு பரிந்துரை செய்தவர்கள், தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களைப் பற்றிய விபரங்களை வெளியிடலாம். அந்த வகையில் பிரெஞ்சு, கனடா, மற்றும் நார்வே நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலாலாவை பரிந்துரைத்துள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெலாரசின் அலெஸ் பெல்யாட்ஸ்கி மற்றும் ரஷ்யாவின் லூத்மிலா அலெக்ஸேவா போன்ற மனித உரிமை போராளிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்