முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. பொதுக்கணக்குகுழு தலைவராக முரளிமனோகர் ஜோஷி மீண்டும் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 2 - பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையை இக்குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷி நடத்தி தனது வரைவு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் அலுவலக ஆலோசனைகளை புறக்கணித்து இந்த ஒதுக்கீட்டை ஆ.ராசா தன்னிச்சையாக செய்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த அறிக்கை மத்திய அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கெட்ட நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த அறிக்கையை இந்த கட்சிகளின் எம்.பி.க்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் இந்த குழுத் தலைவரின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்த குழுவின் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்திய பா.ஜ.க. மேலிடம் முரளி மனோகர் ஜோஷியையே நியமிக்கலாம் என்று சபாநாயகர் மீரா குமாருக்கு ஆலோசனை கூறியது. இதையடுத்து முரளி மனோகர் ஜோஷியை பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக சபாநாயகர் மீரா குமார் மீண்டும் நியமித்தார். இந்த நியமனம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த தலைவர் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்