முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம். பாதுகாப்பு: சென்னையில் காலக்கெடு நீடிப்பு

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.3 _ ஏ.டி.எம். மையங்களுக்கு பாதுகாப்ப ஏற்பாடுகளை செய்ய சென்னையில் தற்போது  நாளை(ஜனவரி4_ந்தேதி )வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கும், வங்கிகளுக்கும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக, கடந்த டிசம்பர் 2_ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ், ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். இந்த கூட்டத்தில் 40_க்கும் மேற்பட்ட வங்கிகளைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கும், வங்கிகளுக்கும் கீழ்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அனைத்து ஏ.டி.எம். மையங்களின் உள்ளே குறிப்பாக ஏ.டி.எம். எந்திரத்தின் அருகிலும், ஏ.டி.எம். எந்திரத்தின் வெளியேயும் தரமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதுபோல வங்கிகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும்

ஏ.டி.எம். மையங்களில் நல்ல திடகாத்திரமான காவலாளிகளை பணியில் அமர்த்த வேண்டும். 

ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்ணாடி கதவுகளில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு நிற தாள்களை அகற்ற வேண்டும்.

கதவுகளில் ஏ.டி.எம். கார்டை சொருகிய பிறகுதான், கதவு திறக்கும்படியான வசதிகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் மட்டும், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பணம் எடுக்கும் ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை டிசம்பர் 31_ந் தேதிக்குள் செய்து முடித்திட வேண்டும் என்று, கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது.

தற்போது ஜனவரி 4_ந்தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக செய்திடுமாறு, வற்புறுத்தியும், எச்சரிக்கை விடுத்தும், அனைத்து வங்கிகளுக்கும், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனவரி 4_ந்தேதிக்கு பிறகு, மீண்டும் அனைத்து வங்கி அதிகாரிகளையும் கூட்டி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும், அந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்