முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி திருநாள்: மதுரை மீனாட்சிக்கு தங்கக் கவசம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, அக் 20 - தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு தங்கக் கவசம் சார்த்தப்படுகிறது. இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 22ம் தேதி காலை, மாலை இரு வேளைகளிலும் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு தங்கக் கவசம், வைரக் கிரீடம் அணிவிக்கப்படுகிறது. அருள்மிகு சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படியாகிறது. தீபாவளிக்கு சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலில் வரும் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடைபெறுகிறது. உற்சவத்தை அடுத்து வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாலை 6 மணிக்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீமீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளி பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகிறார். வரும் 28ம் தேதி மாலை 6.30 மணிக்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். வரும் 29ம் தேதி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆடி வீதியில் எழுந்தருள்கிறார்.

வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருக்கோயில் கந்தசஷ்டி உற்சவம் நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு அருள்மிகு கூடல் குமாரருக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியும், சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெறும். திருக்கோயிலில் வரும் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் 24ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரையிலும் உபயதாரர்கள் சார்பாக திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படுகின்றன. இது தெய்வீகம் மற்றும் ராஜரீக மாற்றத்துக்கு உள்பட்டது எனவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் நடராஜன் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்