முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதால் மனஅமைதியின்றி தவிக்கிறேன்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர், மே - 8 - மாவோயிஸ்டுகளால் எனது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. என் மீது பாசம் வைத்திருந்த இருவரையும் இழந்ததால் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார் மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து மீண்டுள்ள கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-
நான் பத்திரமாக திரும்பி வந்து விட்டேன். இருந்தாலும் இன்னும் நான் நொறுங்கிப் போயிருக்கிறேன்.  எனது பாதுகாவலர்கள்  அம்ஜத் மற்றும் கிஷன் மீது நான் மிகவும் அன்பு வைத்திருந்தேன். என் மீது அவர்களும் அதிக பாசத்துடன் இருந்தனர். அவர்களை நினைக்கும்போதெல்லாம் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தூங்க முடியாமல் தவிக்கிறேன். எந்தவித மீடியா வெளிச்சமும் இல்லாமல் அவர்களது வீட்டுக்குப் போக விரும்புகிறேன். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விரும்புகிறேன். என்னால் எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வழிகளில் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.இப்படி கொடூரமான முறையில் எனது கடத்தல் நடைபெறும் என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. என் மீது அத்தனை நம்பிக்கையுடன் அந்த அரசு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மஞ்சிபரா கிராம பழங்குடியின மக்களின் மனதில் பெரும் பயங்கரவாத அச்சுறுத்தலை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.  இந்த சோதனையான நேரத்தில் உறுதுணையாக நின்றவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்து விட்டது. குடும்பத்தினருடன் அமைதியான முறையில் நேரத்தை செலவிட விரும்பினேன். தொடர்ந்து சுக்மா மாவட்ட மக்களுக்காக உழைக்கப் போகிறேன். எனது வேகத்திலும், செயல்பாட்டிலும் எந்தக் குறைவும் இருக்காது. அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மேனன். மாவோயிஸ்டுகள் பிடியிலிருந்து மீண்டு வந்த மேனன், சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதாக முதலில் தகவல்கள் வந்தன. இருப்பினும் அதை சத்தீஷ்கர் மாநில முதல்வர் ரமன் சிங் மறுத்து விட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவராக மேனன் நீடிப்பார் என்று அவர் கூறியிருந்தார். அதன்படியே மீண்டும் கலெக்டராக செயல்படத் தொடங்கியுள்ளார் மேனன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்