முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி ஆலோசனை

புதன்கிழமை, 27 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை 29-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை 70 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து மே 4-ம் தேதி முதல் 3-வது கட்ட ஊரடங்கின்போது, குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதுடன், தனி கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்தபடியே இருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

இதையடுத்து மே 18-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை 4-வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்தான விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 25-ம் தேதி முதல் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து தமிழகத்திலும் சில விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 4-வது கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

இதற்கு அடுத்தகட்டமாக மருத்துவ நிபுணர்கள் வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், கொரோனா பாதிப்பு குறித்து மே 29-ம் தேதி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து