முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த 9 மாத செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த 9 மாத செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி 98-வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினியின் மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அதனையும் தாண்டி 200 கோடி செலவில் திருக்கோயில் திருப்பணிகள், குடமுழுக்கு திருப்பணிகள், நந்தவனங்கள் பராமரிப்பு, புதிய குளங்கள் ஏற்படுத்துதல், பழைய குளங்களை தூர்வாருதல், திருத்தேர்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டு ஆன்மிகவாதிகளும், பக்தபெருமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர்.

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் வேண்டுமென்றே அவதூறு விமர்சனங்களை தொடர்ந்து செய்துவருகின்றனர். எந்தவிதத்தில் விமர்சனங்கள் செய்தாலும் எங்களது பணியை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தொடர்ந்து செய்வோம்.

இந்து சமய அறநிலையத்துறை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கிய நிதி எவ்வளவு, எந்தெந்த திட்டங்களுக்கு அவை செலவிடப்பட்டது, எந்தெந்த திட்டங்களுக்காக செலவிடப்பட உள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் துவங்கப்பட உள்ளது என்பது குறித்து வருகின்ற செவ்வாய் அல்லது புதன்கிழமை வெளிப்படை தன்மையுடன் அறிக்கையாக வெளியிட உள்ளோம்.

இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தவறுகள் எங்கு நடந்தாலும் அதனை இந்துசமய அறநிலையத்துறை நிச்சயம் வேடிக்கை பார்க்காது, தவறு செய்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் செய்தால் அந்த புகாரின் உண்மைத் தன்மையை அறிந்து நிச்சயம் அதிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து