முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 3 ஏ தேர்வு: 15 காலி பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் போட்டி..!

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
TNPSC 2023 01 28

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 3 ஏ தேர்வில் 15 காலி பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் போட்டி போட்டு தேர்வெழுதியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 14 இளநிலை ஆய்வாளர் பணியிடங்கள் மற்றும் ஒரு பண்டகக்காப்பாளர் பணியிடம் என மொத்தம் 15 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.

கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள இந்த பணியிடங்களுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் போட்டி போடுகின்றனர். மாணவர்களிடையே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், இந்த தேர்வுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 45,223 ஆண்களும் 53,582 பெண்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 98,807 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட 15 மாவட்டங்களில் 335 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில், சென்னையில் மட்டும் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் மட்டும் 10,841 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வில், வினாத்தாள் சற்று எளிமையாக இருந்ததாகவும், தமிழ் பகுதி மிக எளிமையாக அமைந்திருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக இருந்தாலும் மிக அதிக அளவில் தேர்வர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டுள்ளது தெரிகிறது. ஏன் என்றால் 15 காலிப் பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரை போட்டி போட்டு தேர்வெழுதியுள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு 3500-க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுள்ளது தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து