முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் : கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
CM 2024-12-02

Source: provided

கடலூர், : எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர்  மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை கடலூரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நெய்வேலியில் தங்கி ஓய்வு எடுத்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று காலை வேப்பூர் அருகே நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் கலந்து கொண்டார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற கவிஞர் வாலியின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது தான் இந்த மாநாடு. இந்த பெற்றோர், ஆசிரியர் கழக மாநாடு.

முதலில் நான் இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், நான் நெய்வேலியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன். நியாயமாக பார்த்தால் 1 மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்திருக்க முடியும். ஆனால் வழியெங்கும் மக்கள் கடல். அதுதான் காரணம். ஆசிரியர்கள் இங்கு இருக்கிறீர்கள். பள்ளி மாணவர்கள் போல் காரணம் சொல்கிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். காலை 8 மணிக்கு கிளம்பினேன். வருகிற வழி முழுவதும் மக்கள் சந்திப்பு. இதுதான் உண்மையான காரணம்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மாநாடு நடைபெறுகிறது. வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ கண்மணிகளை வார்ப்பித்தும் வளர்த்தெடுத்தும் வருகிற பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். அன்னை, தந்தை, ஆசிரியர் கூடியிருக்கும் மாநாடு இது. நீங்கள் மொத்தமாக கூடியிருப்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத காட்சி. ஒட்டுமொத்த நாடும் பார்த்து அதிசயிக்கிற காட்சி. இதுதான் தமிழ்நாடு. இதுதான் நமது மாநில கல்வித் திட்டத்தின் சிறப்பு. தமிழ்நாடு அரசு செய்வது எல்லாமே சாதனைகள்தான்.

அதில் கல்வித்துறையில் உலக தரத்திலான சாதனைகளை செய்து கொண்டி ருக்கிறோம். அந்த வரிசையில் இதுவும் சாதனை மாநாடாக அமைந்திருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என 3 தரப்புக்களுக்குமான கருத்துக்களை வழங்குகிற மாநாடு இது. இதில் நான் ஆசிரியருமில்லை, மாணவருமில்லை, பெற்றோரே நான் உங்களில் ஒருவன். உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை அறிந்தவன். அதற்கேற்ப கடமைகளை செய்கிறவன்.

திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் பள்ளிகளை உருவாக்கினோம், மாணவர்களை சேர்த்தோம், படிக்க வைத்தோம். மதிப்பெண் வாங்க வைத்தோம், வெளியில் அனுப்பினோம். இத்தோடு பள்ளிக் கல்வித்துறையின் கடமை முடிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தமிழ்நாட்டின் சொத்து என்கிற அந்த நினைப்புடன் அவர்களை வளர்த்துக் கொண்டு வருகிறோம். பெற்றோருக்கு பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே அளவு அக்கறை இந்த அரசுக்கும் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது. இதை சொல்வது மத்திய அரசின் அறிக்கைகள். ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் கல்வி தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ் நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். மத்திய அரசு 2152 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்து உள்ளது. இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழ் மக்களுக்கு வேட்டு வைக்கிற கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. காரணம் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் அந்த திணிப்பை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.

இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகிற கொள்கை அது. அதை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். தொடர்ந்து உணர்த்துவோம். மத்திய அரசின் கொள்கையால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

மத்திய கல்வி அமைச்சர் கேட்கிறார். எல்லா மாநிலங்களும் மும்மொழிக்கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கிறார். அவருக்கு நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. எங்கள் உயிரை விட மேலாக தமிழை மதிக்கிறவர்கள் நாங்கள். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ் மொழியை காக்கும் அரணாக தி.மு.க. திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. இந்தி பெல்ட் என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்து விட்டன. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் இப்போது தான் விழிப்புணர்வு அடைந்து வருகிறது. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் தற்போது விழிப்புணர்வு அடைய தமிழ்நாடு தான் காரணம். இவ்வாறு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 15 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 15 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 17 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 17 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 15 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து