முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 28 - இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களை அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஞானதேசிகனிடம் நாகை மீனவர்கள் கோரினர். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கும். 32 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசிடம் உள்ள படகுகளை மீட்கவும் மத்திய அரசு மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பதில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. தற்போது மீனவர் சங்க பிரதிநிதிகள் என்னிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன் படி இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

32 மீனவர்களும் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே நிச்சயம் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தங்களுடைய பொருளாதார கொள்கை பற்றியோ வெளிநாட்டு கொள்கை பற்றியோ பேசவில்லை. மாற்று சிந்தனையோடு எந்த பிரச்சினையை எப்படி அணுகுவோம் என்றும் பேசவில்லை.

அதற்கு மாறாக தெருமுனை பிரசாரம் போல் மத்திய அரசையும், பிரத மரையும் குறை சொல்லி பேசி இருக்கிறார். எந்த பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரசும் அதைத்தான் விரும்புகிறது. ஆனால் பிரச்சினைகளை பூதாகரமாக்கி இரு நாடுகளுக்கிடையே மோதலை உருவாக்கி எந்த பயனும் இல்லாமல் செய்ய மோடி முயற்சிக்கிறார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 1 லட்சம் ராணுவ வீரர்களை நாட்டின் மேற்கு பகுதியில் ஒரு மாத காலம் நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் அழைத்தார்கள். அதுபோல் லாகூருக்கு வாஜ்பாய் சமாதான தூதுவராக பஸ்சில் சென்ற போதுதான் பாகிஸ்தான் ராணுவம் கார்கில் சென்றது. இதுதான் அவரது சாதனை.

இந்திய எல்லையில் சீன படைகள் நுழைந்த போது மன்மோகன்சிங் மவுனமாக இருப்பதாக எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் ஒரு குண்டு மணி அளவு கூட சேதம் இல்லாமல், சீன ராணுவத்தை பின் வாங்க வைத்தவர் மன்மோகன் சிங். இதுதான் அவரது ராஜ தந்திரம்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்