முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. வெற்றிக்கு மோடி அலைதான் காரணம்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.21 - மகாராஷ்டிரம், அரியானா சட்டசபை தேர்தல்களில் மோடி அலை சுனாமியாக சுழன்றடித்து எதிர்க்கட்சிகளை அழித்துவிட்டது என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமீத் ஷா கூறியதாவது:-ஜனநாயக நடைமுறைகளின்படி அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி ஆட்சியமைக்க உரிமை உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக ஆட்சியமைக்கும்.

மோடி அலை ஓய்ந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். இருமாநில சட்டசபை தேர்தல் அதனை பொய்யாக்கிவிட்டது. இந்தத் தேர்தலில் மோடி அலை சுனாமியாக சுழன்றடித்து எதிர்க்கட்சிகளை அழித்துவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மாத நல்லாட்சிக்கும் அவரது சிறந்த நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும்வகையில் மகாராஷ் டிரா, அரியானாவில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தையின்போது நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி உறவை முறிக்கவில்லை. எங்களது கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்சித் தொண்டர்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.

பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருந்ததால் தொகுதிப் பங்கீட்டின்போது அதிக இடங் களைக் கோரினோம். எங்களது கணிப்பு உண்மை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

அரியானாவில் இதற்கு முன்பு 26 தொகுதிகளுக்கு மேல் போட்டி யிட்டது இல்லை. இந்தத் தேர்தலில் 74 இடங்களில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளோம். கடந்த சட்டசபை தேர்தலின்போது பாஜகவுக்கு 9 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இப்போதைய தேர்தலில் 33 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

மகாராஷ்டிரத்தை பொறுத்த வரை 119 தொகுதிகளுக்குமேல் பாஜக போட்டியிட்டது இல்லை. கடந்த சட்டசபை தேர்தலின்போது 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த தேர்தலில் 288 தொகுதிகளிலும் போட்டியிட்டு 122-க்கும் அதிகமாக இடங்களைக் கைப்பற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கத் தயார் என்று அறிவித்துள்ளது, அந்தக் கட்சியின் ஆதரவை ஏற்பீர்களா அல்லது மீண்டும் சிவசேனை யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அமித் ஷா, இப்போதைக்கு எதுவும் கூற முடியாது, சிறிது காலம் காத்திருங்கள் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்