முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35-வது பிறந்த நாள் கொண்டாடிய டோனியின் கேப்டன்சி சாதனைகள்

வியாழக்கிழமை, 7 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - பல கேப்டன்சி சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் கேப்டன் டோனி நேற்று  35-வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். 2007-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை தோல்வி, கிரெக் சாப்பல் ஊதிப்பெருக்கிய சர்ச்சைகள் என்று தடுமாறிக் கொண்டிருந்த போது கேப்டனாக்கப்பட்ட தோனி முதல் டி-20 உலகக்கோப்பையை வென்று தன்னம்பிக்கை இழந்து கொண்டிருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தார். 

2008-ம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதன் முதலாக ஆஸ்திரேலியாவை 3 இறுதிப் போட்டிகளில் 2-ல் தொடர்ச்சியாக வென்று கோப்பையைக் கைப்பற்றினார். 2011 உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, நிறைய இருதரப்பு ஒருநாள் தொடர்களில் வெற்றி என்று தோனியின் கேப்டன்சி சாதனைகளை அடுக்கலாம். டெஸ்ட் போட்டிகளிலும் அதிக வெற்றியுடன் நம்பர் 1 கேப்டனாகவே திகழ்ந்தார் டோனி. 60 போட்டிகளில் இவர் 27 போட்டிகளில் தன் தலைமையில் வென்றுள்ளார். மொத்தம் 191 ஒருநாள் போட்டிகளில் டோனி தலைமையில் இந்திய அணி 104 போட்டிகளில் வென்றுள்ளது.  டி-20 போட்டிகளில் ரிக்கி பாண்டிங்குக்கு இணையாக 63 போட்டிகளில் 36 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 2009-ம் ஆண்டு டோனியின் கேப்டன்சியில்தான் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்தது.

பிறகு 2010-ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனி தலைமையில் இந்தியா 1-1 என்று தொடரை சமன் செய்ததோடு, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-1 என்று தோனி தலைமையில் இந்திய அணி சமன் செய்தது. ஸ்ரீசாந்தின் அந்த ஸ்பெல்லை மறக்க முடியாது. குறிப்பாக ஜாக் காலீசை வீழ்த்திய பவுன்சர் அபாரமானது.  ஆஸ்திரேலியர் அல்லாத ஒரு கேப்டன் 100 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சியில் வெல்வது என்ற சாதனைக்கும் தொனி சொந்தக்காரர். 100 ஒருநாள் போட்டிகளில் தன் தலைமையில் வெற்றி பெற்ற 3-வது கேப்டன் என்ற சாதனையும் தோனியின் வசமே. முன்னதாக ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங் 100 ஒருநாள் போட்டிகளில் தங்களது கேப்டன்சியில் வென்றுள்ளனர். 90 டெஸ்ட் போட்டிகள் ஆடிய தோனி 4,876 ரன்களை எடுத்தார்.

இதில் அவருக்குப் பிடித்த சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த அதிரடி 224 ரன்களே அவரது அதிக பட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். டெஸ்ட் சராசரி 38.09. 278 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8,918 ரன்களை 51.25 என்ற சராசரியின் கீழ் அவர் எடுத்துள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 183 நாட் அவுட். இதனை அவர் இலங்கைக்கு எதிராக எடுத்தார். இலக்கைத் துரத்துவதில் அப்போது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் இதுதான். 71 டி-20 போட்டிகள் ஆடியுள்ள டோனி இதுவரை அரைசதம் கண்டதில்லை என்பது ஆச்சரியமே. 1069 ரன்களை அவர் எடுத்துள்ள நிலையில் அதிகபட்ச ரன் எண்ணிக்கை 48 என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்