முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வெயில் சதமடிக்கும் கோடை மழையும் பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  தமிழகத்தில் பங்குனி மாதத்தின் வெயிலின் கோடை வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கம் 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெயில் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் அதிகாலை நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் மாறி மாறி வருவதால் நோய் தாக்குதலும் ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயில் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுபோல கோடை காலம் ஆரம்பமே அடித்து ஆடுகிறது. பல இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள நிலையில் நேற்று முதல் வெப்பம் 100 டிகிரியை தொடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகாலையில் பனி பெய்தாலும் பகலில் வழக்கமாக வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தில் மே மாதம் அக்னி நட்சத்திர காலமாகும். கத்திரி வெயில் காலம் வரும் முன்பே சுள்ளென்று சுடுவதால் பலரும் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

நெல்லையில் நேற்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 99 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. இதுபோல் மாநிலத்தில் பல நகரங்களில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. நேற்று முதல் பனிப்பொழிவு குறைந்து வெயில் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.  நேற்றும் இன்றும்  நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் அளவு சதமடிக்கும். நாளை 23ம் தேதி நெல்லையில் வெப்பப்பதிவு 102 டிகிரியை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் வருகிற ஜூன் மாதம் 2ம் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் வரும் கத்திரி வெயில் மேலும் அதிகமாக இருக்கும். சில பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெயில் காலங்களில் அதிக அளவில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை குளிர் பானங்களை அருந்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து