முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதீய ஜனதா கட்சி மீது திக்விஜய் சிங் கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜன.22 - போதுமான தலைவர்கள் இல்லாமல் பாரதீய ஜனதா கட்சி தடுமாறுகிறது என்றும் அதனால்தான் உமா பாரதி போன்றவர்களை உ.பி. தேர்தல் களத்தில் அக்கட்சி ஈடுபடுத்தி வருகிறது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச தேர்தலில்  அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெறும் தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ம.பி. முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். 

அவர் தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில் - பாரதீய ஜனதா கட்சியில் தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் இல்லாமல் திவால் ஆகி விட்டது . அதனால்தான் உமா பாரதி போன்றவர்களை உ.பி. தேர்தலில் அக்கட்சி களமிறக்கியுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

உ.பி.யில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் உமா பாரதி காங்கிரஸ் கட்சியையும் திக் விஜய் சிங்கையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் திக் விஜய் சிங் பா.ஜ.க.வை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச பா.ஜ.க.வில் தலைவர்களுக்கு  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . அதனால்தான் உமா பாரதி போன்ற இந்துத்துவா தலைவர்களை  அக்கட்சி களமிறக்கியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

உ.பி.யில் தலைவர்கள் கிடைக்காததால்தான் அக்கட்சி மத்திய பிரதேசத்தில் இருந்து உமா பாரதியை இறக்குமதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு பேசுவதற்கு எந்த பிரச்சினையும் கிடைக்கவில்லை. அதனால்தான்  தேர்தலுக்காக இது போன்ற வேடிக்கை விளையாட்டுக்களை நடத்தி வருகிறது என்றும்  சிங் கூறினார்.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிடுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கேட்டதற்கு இது பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த திக் விஜய் சிங் உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தெளிவான மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்