முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் ஐகோர்ட் தலைமை நீதிபதி உறுதி

புதன்கிழமை, 18 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதால் தாமாக முன் வந்து விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சட்டப்படி தண்டனை
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, தொடர்ந்து 7 மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கருதப்படும் அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரிக்க முடியாது...
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் முறையிடுகையில், சிறுமிக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும். அதனால், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து செய்திகளை பார்த்தேன். போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால், நீதிமன்றம் அதனை விசாரிக்க முடியாது. இருப்பினும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்றார்.

இருப்பினும், இதனை சிறப்பு வழக்காக கருதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், தலைமை நீதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து