முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இன்று  (ஜூலை 25) பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் தேர்தல் விதிகளின்படி திங்கள்கிழமை நள்ளிரவுடன் பிரசாரங்களை முடித்துக் கொள்ளுமாறு கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதற்குப் பிறகு, வேட்பாளர்களோ, கட்சித் தலைவர்களோ பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களில் பேசக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசியல் விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்தத் தேர்தலில், முக்கிய கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் நிறுவனத் தலைவர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மற்றும் மருமகனும் பனாமா ஆவண ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. இது, வாக்காளிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரிக்கு எதிராக பாகிஸ்தானின் தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கைகளாலும் தேர்தல் போக்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தேர்தல் பிரசாரங்களின்போது பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததும் வாக்காளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதால், அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எனினும், தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு முன்பு வரை வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ, மஜ்லிஸ்-இ-அமல் மதவாதக் கூட்டணியின் தலைவர் மெளலானா ஃபாஸ்லுர் ரெஹ்மான் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து