முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் வினேஷ் போகத் போட்டி?

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Vinesh-Phogat 2024 08 06

Source: provided

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஏற்கெனவே வினேஷ் போகத் தெரிவித்திருந்தார். ஆனால், வருகின்ற அரியானா தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். “வருகின்ற அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத்தும், யோகேஸ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியாவும் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________

ஐபிஎல் அணிகள் மீது குற்றச்சாட்டு

இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளை நடத்துகின்றன. இந்த ஆண்டு முதல் டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கிறார்கள் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடும் பொழுது தடுமாறுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களால் முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாட முடிவதில்லை. இதேபோல மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் சையத் முஸ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதற்கு ஐபிஎல் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது நல்ல ஒரு யோசனை கிடையாது. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

_____________________________________________________________________________________________

ஜன்னிக் சின்னெர் சாம்பியன்

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நிறைவடைந்தது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னெர், முதல் செட்டை டை -பிரேக்கர் வரை சென்று போராடி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

_____________________________________________________________________________________________

சி.எஸ்.கே.வின் விழிப்புணர்வு வீடியோ 

சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பதில் தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 'Zero is Good' பிரச்சாரத்திற்க்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான, அதுவும் சென்னையை அங்கமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் ருதுராஜ், ரகானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்திரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

_____________________________________________________________________________________________

ஆலோசகராக ஜாகீர் கான்?

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

_____________________________________________________________________________________________

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் ஸ்மித்

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவது குறித்து அந்த அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தரப்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என கூறப்பட்டாலும், எத்தனை அணிகள் பங்கேற்கலாம் போன்ற விவரங்கள் எதுவும் ஒலிம்பிக் குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. போட்டிகள் டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்குமென ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் நான் விளையாடலாம். உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால், மற்ற வீரர்களைக் காட்டிலும் என்னால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒப்பந்தம் முடிந்த ஓராண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்கும் என்றார்.

_____________________________________________________________________________________________

சென்னையில் மனு பாக்கர்

சென்னை வந்த ஒலிம்பிக் நாயகி மனு பாகர், பள்ளி மாணவிகளுடன் உற்சாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதித்துக் காட்டிய இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் நேற்று சென்னை வந்தார். முகப்பேரில் உள்ள வேலம்மாள் நெக்சஸ் பள்ளியில் அவருக்கு இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் பாராட்டு விழா தொடங்கியது. மனு பாகரின் வருகையால் உற்சாகம் அடைந்த பள்ளி மாணவர்கள் அவருக்கு ஆளுயர ரோஜா மாலையையும், தலையில் கிரீடம் ஒன்றையும் அணிவித்து கெத்தாக வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மனு பாகர், அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். பின்னர் மேடையில் அவர் அமர்ந்திருக்கும் போது அங்கு இருந்த மாணவிகள் மனு பாகரை நடனமாட அழைத்தனர். அவர்களின் அழைப்பை சற்றும் மறுக்காமல் ஏற்றுக் கொண்ட அவரும் உற்சாகமாக சேர்ந்து நடமாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து