முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 21, 22-ம் தேதிகளில் கடலூருக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.வின் பழக்கம்; வாழ வைப்பது தி.மு.க.வின் வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் உடன்பிறப்புகளால் வளர்க்கப்பட்ட தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.

கழகத்தைத் தோளிலும், தலைவர் கலைஞரையும் - அவருடைய உடன்பிறப்புகளான உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் தி.மு.க. பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.

பிப்ரவரி 8ம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.

மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

தி.மு.க.வை பொறுத்தவரை அமைச்சர் முத்துசாமி அவர்களும் மற்ற நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து நின்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அதனால் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரித்தார்கள். மக்கள் வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.

இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் - உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். 'இருநூறு இலக்கு' என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, மத்திய ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மத்திய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.

 

இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து