முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

திருச்செந்தூர்,நவ.01 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசிஷ்டி திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி. லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் தரிசனம் செய்தனர்.  முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் படை வீடாகும். வங்க கடலோரம் மிக அழகாக அமைந்துள்ள திருத்தலம். இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் மிக மிக முக்கியமான திருவிழா சூரசம்ஹார திருவிழா ஆகும். தேவர்களின் உரைகளை கேட்ட சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியவர் சுப்பிரமணிய சுவாமி. சிவபெருமானின் சக்தியாக வெளிப்பட்ட சுப்பிரமணியசாமி சுவாமி சூரனை வதம் செய்து ஆட்கொண்ட திருத்தலம் திருச்செந்தூராகும். 

இத்திருத்தலத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கும் முருகப்பெருமானின் அருளை வேண்டியும் கடந்த 26ம் தேதி முதல் கந்தசிஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய நாள்முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் உள்ளேயும், வெளிப்பிரகாரங்களிலும் தற்காலிக மற்றும் நிரந்தர மண்டபங்களிலும், கோவில் மற்றும் தனியார் விடுதிகளிலும் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளார்கள். இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, லண்டன், அமெரிக்கா, ஐப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். 

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 10 மணிக்கு மூலவருக்கும் யாகசாலையில் ஸ்ரீஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலை தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வாணையுடன் தங்க சப்பறத்தில் மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட சண்முகஉலாச மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதியினம் கந்தசிஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் பக்தர்கள் புடை சூழ கடற்கரையில் சூரசம்ஹாரத்திற்கு கிளம்பினார். முதலில் சாரகசூரன் யானை முகத்துடன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிங்கமுகாசூரன் வதம் நடபெற்றது. அதனையடுத்து ஆணவமே உருவான சூரபத்மன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்யும் பொழுது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணதிர சூரசம்ஹாரம் நடைபெற்றது. மாயமான சூரபத்மன் சேவல் உருக்கொண்டு முருகனிடம் போரிட வந்தான். சூரபத்மனின் மாயத்தோற்றத்தில் வந்த சேவலை முருகபெருமான் தனது கொடியாக மாற்றிக் கொண்டார். இந்த நிகழ்வு நடைபெற்ற போது வானத்தில் கருடன் மூன்று முறை வலம் வந்தது. இந்த காட்சியை கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். 

சூரசம்ஹாரம் முடிந்தபின் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷமண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வாணையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோவில் உள்ளே உள்ள 108 மகாதேவ சன்னதி அடைந்தார். அங்கு சுவாமிக்கு எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அந்த கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு யாகசாலையில் 6 நாளும் பூஜை செய்யப்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கையில் தகடு கட்டிக் கொண்டார்கள். இன்று காலை 6 மணிக்கு தெய்வாணை அம்பாள் தபசு கோலத்தில் தெப்பக்குளம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருவார். மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமயில் வாகனத்தில் தெப்பக்குளம் அருகே மடத்தில்  தபசு கோலத்தில் இருக்கும் தெய்வாணை அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள்மாலை மாற்றும் காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு திருப்பணி மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தனது பரிவாரங்களுடன் 8 வீதிகளிலும் வலம் வந்து திருக்கோவில் கடற்கரையில் வந்தடைந்தார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக்காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அறநிலைத்துறைய ஆணையர் சந்திரகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, இந்துசமயஅறநிநிலையத்துறை செயலாளர் ராஜேந்திரன், ராம்கோ சிமெண்ட் உரிமையாளர் ராமசுப்பிரமணிய ராஜா, திருக்கோவில் பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிகரமுத்து, ஹோட்டல் மணி ஐயர் உரிமையாளர் மூர்த்தி, ரமணி, ஆனந்த், சிவமுருகன் லாட்ஜ் உரிமையாளர் அருள், அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் கிட்டப்பா, திருச்செந்தூர் பேரூராட்சி ஒன்றிய தலைவர் சுரேஷ் பாபு, ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ஹேமலதா, நகர செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அசோக் பவன் உரிமையாளர் ராஜா, திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, திருச்செந்தூர் பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள் அரசு இந்திர மீனா, சுப்புலெட்சுமி, மணிகண்டன், லெட்சுமணன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத், மலேசியாவை சேர்ந்த டப்போ எஸ். தவராஜா, தத்தின் ருக்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயார் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி, பிரதாபன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஊர்காவல் படை சார்பில் 500 ஊர்காவல் படை தொண்டர்கள் பக்தர்களை வரிசையில் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். திருச்செந்தூர் செயல் அலுவலர் சுப்பையா தலைமையில் நூற்றுக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கந்தசிஷ்டி திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் நேரடியாக திருச்செந்தூர் வந்து சூரசம்ஹார நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பல்வேறு அமைப்புகள் சார்பில் சூரசம்ஹார நிகழ்வுகளை காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

சூரசம்ஹாரம் முடிந்தபின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி முருகனை தரிசனம் செய்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டார்கள். கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த திருச்செந்தூரில் நேற்று சூரசம்ஹாரத்தன்று காலை 10 மணி முதல் மழையில்லாமல் வெயில் எடுத்ததை பக்தர்கள் சந்தோசமாக பேசிக்கொண்டார்கள். தெய்வசக்தியின் மூலம் தான் மழை இல்லாமல் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்க்க இறைவன் அருள் செய்தான் என்று மனநிறைவோடு பேசிக்கொண்டு சென்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்