முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி உரை: அ.தி.மு.க. உறுப்பினர்கள் கண்டனம்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் 13 - பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் முதல்நாளான நேற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றினார். அவரது உரையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து எதுவும் இடம்பெறாததற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. கூட்டத்தின் முதலாம் நாளான நேற்று இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நீண்ட உரையாற்றினார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் உரையில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி உரையை அ.தி.மு.க. உறுப்பினர்கள் கவனமாக கேட்டுவந்தனர். உரையின் கடைசி நேரத்தில்கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவந்து தாக்கல் செய்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதாவது தீர்மானம் குறித்து ஜனாதிபதி உரையில் இதுவும் இடம் பெறவில்லை. 

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இறுதிப்போரில் பாகிஸ்தான், சீனாவின் கருத்து கேட்டு அப்பாவி தமிழர்கள் மீது ரசாயான குண்டுகளை வெடித்து ஆயிரக்கணக்கான தமிழர்களை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவின்பேரில் கொன்று குவித்தனர். தப்பிய தமிழர்களை சிங்கள ராணுவம் கொடுமை செய்தது. இளைஞர்களாக இருந்தால் அவர்களின் உறுப்புக்களை வெட்டுவது, கண் பார்வையை கெடுத்து குருடர்களாக்கியும் பட்டினி போட்டும் கொடுமை படுத்தினர். இளம் பெண்களாக இருந்தால் அவர்களை வெறித்தனத்தோடு கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாது முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் கடும் குளிரிலும்,வெய்யிலும் போட்டு வாட்டி எடுத்தனர். இதுகுறித்து நண்பு என்ற போர்வையில் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு இருந்து வந்தது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டும், கொடுமைப்படுத்தியும் வந்ததை எப்படியோ வீடியோ படம் எடுத்தன. அதோடுமட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் வசிக்கும் தமிழர்கள் ஒன்று திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடமும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளிடம் கோரின. அதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்தது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 3 முறை கடிதம் எழுதியுள்ளார். அதற்கு மன்மோகன் சிங் இதுவரை பதில் கடிதம் எழுதியதாக தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. சென்னை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு இலங்கை நட்பு நாடு என்றும் அதேசமயத்தில் தமிழர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படும் என்றும் மழுப்பலாக கூறினார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தீர்மானம் குறித்து ஜனாதிபதி உரையில் மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜனாதிபதி உரையின் இறுதியில் ராஜ்யசபையின் அ.தி.மு.க. குழுத்தலைவர் மைத்ரேயன் குறுக்கிட்டு, இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு தனது நிலையை விளக்காதது ஏன்? தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது என்றும் மைத்ரேயன் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இதற்கு பாராளுன்ற இருசபை எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் குறித்தும் உரையில் இடம்பெறாததற்கு அந்த மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்