முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத விவகாரம்: 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் சாசனப்படி 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இந்த இவிவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் அல்லது தீர்த்து வைக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதி பார்திவாலா பெஞ்ச் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு நேற்று விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் நேற்று காலையில் தமிழக அரசு தரப்பில் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று நேற்று பிற்பகல் 3 மணிக்கு கவர்னருக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதன்படி தற்போது நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "கவர்னர் என்பவர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர். ஒரு பக்கம் கவர்னர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதம் எல்லாம் நடைபெற்று வருகிறது என்பதையும் சுப்ரீம்கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசு 2-வது முறையாக ஒரு மசோதாவை அனுப்பி வைத்தால் அதற்கு கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும். கவர்னரின் செயல்பாடுகளால் தமிழக பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அதற்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறுகையில், கவர்னர் - மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு கவர்னர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துவிட்ட பின்னர் என்ன நிவாரணத்தை நாங்கள் தர முடியும்? எந்தெந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப முடியும்? கவர்னர்கள் ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். 

தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், மசோதா மீது கவர்னர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே சட்டப்பிரிவு 200ன் படி செயல்பட கோர்ட்டு உத்தரவிட வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ஒருவேளை மசோதா சரியாக இல்லை என கவர்னர் கருதினால் என்ன செய்வது ? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், அவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஆண்டுக்கணக்கில் கவர்னர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். முடிந்த அளவுக்கு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசியல் சாசன விதிகளின் கீழ், கவர்னருக்கு கூடுதல் வாய்ப்பு என்பது இல்லை. அவருக்கு விருப்பமான வழியில், அரசியல் சாசன விதிகளை புரிந்து செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார். மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் பொருள், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்கு போய்விட்டது என்பதுதான். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்.

எந்தக் காரணத்தையும் கூறாமல், மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம். மேலும், கேசரி ஹந்த் வழக்கின் தீர்ப்பின்படி, சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பின் வாதத்தை நேற்று முடிக்க நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என நாளை தெரிவிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இன்னும் 24 மணிநேரம் இருப்பதால், கவர்னர் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். வேண்டுமானால் தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் பரந்த நோக்கத்திலான அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து