முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் போலீசை மூன்றாம் பாலினம் என்ற கூற்று ரத்து

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.19 - திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து இரு நாட்களாகியுள்ள நிலையில், தற்போது தமிழக போலீசில் பணியாற்றிய பெண்ணை திருநங்கை என்று கூறி பதவி நீக்கம் செய்த அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்ரத்து செய்தது. மேலும் அவரை பெண் என்று அழைக்கவும், மீண்டும் அவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு பிறந்த நங்கை என்பவர் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். பெண்கள் பிரிவில் காவல்துறை தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அவருக்கு 2011 ஆம் ஆண்டு காவலர் பணி வழங்கப்பட்டது. ஆனால் திடீரென மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அதன் ஆய்வுக்கு பின் அவரை திருநங்கை என்று கூறி பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

காவல் துறையின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்  வழங்கிய தீர்ப்பில், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். பாலினம் பற்றி குறிப்பிடும் போது பெண் என்று அவர் தன்னை குறிப்பிட்டுள்ளார். அவரது பிறப்பு சான்றிதழிலும் பெண் என்றே கூறப்பட்டுள்ளது. சமுதாயமும் அவரை பெண் என்றே அங்கீகரித்துள்ளது. அப்படியிருக்க எந்த அடிப்படையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மருத்துவ பரிசோதனையின் மூலம் தான் அவரது பாலினம் உறுதி செய்யப்படுமென்றால், அதே விதி வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் தானே என்ற நீதிபதிகள், இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்தனர். எந்த ஒரு நீதிமன்றமும் பாலினத்தை நிரூபிக்க கோரி யாரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் அப்பெண்ணை மீண்டும் வேலையில் தொடர அனுமதிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்