முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை செய்து வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 17 ஜூன் 2023      தமிழகம்
CM-1 2023 06 17

Source: provided

சென்னை : தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம் என்றும், ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, நந்தம்பாக்கத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் கட்டுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, 

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையானது மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது. தமிழக அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன.

தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினை கொண்டதாக இருக்கின்றது. அனைவரையும் உள்ளடக்கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 

நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். 

ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன்.

தற்போதுள்ள சூழ்நிலையில், ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறி விட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. 

முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரயும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்கவேண்டும்.  தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறேன். 

படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும். நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 என்ற சிறப்புக் கொள்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியே ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில் சென்னையில் ஒரு நிதிநுட்ப நகரம் அமைத்திடுவதற்கும், நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ஒரு நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜனவரி மாதம் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்று, சிறப்பிக்குமாறும் உங்கள் துறை சார்ந்த தொழில்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து