முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 26-ம் தேதி மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, வரும் 26-ம் தேதி மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது., செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், மொத்தம் உள்ள 6 வார்டுகளில், 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், பொதுமக்களிடையே கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எவ்விதப் பணிகளையும் செய்து தராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அலைக்கழித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

கழக ஆட்சியில், மாடம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சிகளாக இருந்தபோது, குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மாடம்பாக்கம்-சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பெற்று வந்தனர். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. மாடம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் இரவு நேரத்தில் எண்ணற்ற மாடுகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

மக்கள் நலன் கருதி, மாடம்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்திட வேண்டும். மாடம்பாக்கம் உள்ளிட்ட தாம்பரம் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தராமல், அவசர கதியில் புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துவிட்டு, அனைத்து விதமான வரிகளையும் பல மடங்கு உயர்த்தி உள்ளதோடு, குடிநீர் இணைப்பே இல்லாத வீடுகளுக்கும் குடிநீர் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். கழக ஆட்சிக் காலத்தில் மாடம்பாக்கம் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்பட்டது. 

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால் வகுப்பறைகள் பாழ்பட்டுள்ளதோடு, மழைக் காலத்தில் மாணவ, மாணவியர் வகுப்பறைகளுக்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இருப்பதாகத் தெரிவித்து, இப்பள்ளியில் அனைத்துவித பழுதுகளையும் உடனடியாக சரிசெய்து, கூடுதலாக புதிய வகுப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதிவாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், மக்களை பெருந்துயரத்திற்கு ஆளாக்கி உள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தராத தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதிக் கழகத்தின் சார்பில், 26.9.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், அண்ணாநகர்-மாடம்பாக்கம் பிரதான சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து