முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் : 'திஷா' குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
CM 2024-12-02

Source: provided

சென்னை : திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று 'திஷா' குழு கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தலைமையில்...

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (பிப்.15) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது., பிரதம அமைச்சர் கிராம சாலைத் திட்டத்தினை செயல்படுத்துவதைப் பொறுத்தவரை தமிழகம், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தத் திட்டத்தின் நான்காவதுகட்ட செயல்பாட்டை 2011-ம் ஆண்டு மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு 500-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, இதுவரை இணைப்புச் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இப்படியான 7 கிராமங்கள்தான் தமிழகத்தில் இருக்கின்றன. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி பெற்ற பிறகுதான் அங்கே இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்த முடியும். அதனால், ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். 

எந்த பதிலும் இல்லை...

இந்தக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் மீண்டும் மத்திய அரசுக்கு இதுகுறித்து வலியுறுத்தப்படும். பிரதம அமைச்சர் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், நான் தொடக்கத்திலேயே தெரிவித்தபடி, அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்தக் குழு மூலமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நிதி வரவில்லை... 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை செயற்படுத்துவதில் திராவிட மாடல் தமிழக அரசு எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. 2023-24-ம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களைவிட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியிருக்கிறோம் நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு அதற்குப் பின்னால், மத்திய அரசால் ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அமைச்சர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்து ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனாலும், இதுவரை நிதி வரவில்லை. ஊதிய நிலுவைத் தொகையாக 2,118 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. இது தொடர்பாக இதற்கும் இக்குழு மூலமாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம்.

நுண்ணுயிர் பாசனத்திற்கு... 

அடுத்ததாக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 2023-24ஆம் ஆண்டில் 1,29,020 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர்ப் பாசன அமைப்புக்காக 109.90 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி 105 விழுக்காடு சாதனை படைத்திருக்கிறோம். நடப்பாண்டில், 2024-25 ஜனவரி மாதம் வரை 76,733 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணுயிர் பாசன அமைப்புக்காக 66.84 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், உழவர்கள் அதிகப் பங்குத் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால், உச்சகட்ட நிலவரம்பான 5 ஹெக்டர் என்பதனை தளர்த்த மத்திய அரசினை வலியுறுத்த நான் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்.

காலதாமதமில்லாமல்... 

மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பது புரிந்திருக்கும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படுமென்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து