முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியை இன்னமும் தி.மு.க. எதிர்ப்பது ஏன்? தொண்டர்களுக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      தமிழகம்
Stelin 2022 02 23

சென்னை, இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் 2-வது நாளாக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், இந்தியை தி.மு.க. ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று நம்மை நோக்கிக் கேட்பவர்களுக்கு, உங்களில் ஒருவனான நான் அன்போடு சொல்லக்கூடிய பதில், “இன்னமும் நீங்கள் அதைத் திணிப்பதால்தான், நாங்கள் அதனை எதிர்க்கிறோம்” என்பதே. திணிக்காவிட்டால், எதிர்க்கமாட்டோம். அதைத் தடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இந்தி எழுத்துகளை அழிக்கமாட்டோம். தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?' என்று இங்கேயுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாக தமிழ் மீது இருந்திருக்க வேண்டும்.

நம்மைக் கேட்பதற்கு பதில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும், இந்தித் திணிப்பில் தீவிரமாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடமும், “காசி தமிழ்ச் சங்கமம் என்று நடத்துகிறீர்களே, கும்பமேளா நடக்கிறதே, அதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் தென் மாநிலங்களில் இருந்தும் உத்தரப்பிரதேசம் செல்லும் பயணிகள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் பெயர்ப்பலகைகளை வைத்திருக்கிறீர்களா? இந்தியாவில் உள்ள மாநில மொழிகளைச் சமமாக மதித்து அறிவிப்புகளைச் செய்கிறீர்களா? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்?

தமிழ்ப் பகையையே கொள்கையாகக் கொண்டு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் இயக்கத்தில் இணைந்திருப்பவர்கள் தமிழுக்காக – தமிழர் நலனுக்காக எப்படி குரல் கொடுப்பார்கள்? திராவிட இயக்கத்திற்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது. தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாகக் கருதி அழித்ததில்லை. பிற மொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவற்றை விரட்டியடிக்கும் என்பதுதான் நமது பண்பாட்டு வரலாறு.

நாம், தமிழர் என்பதைக் காட்டுவது தமிழ்மொழிதான். இதற்கு ஆபத்து வந்துவிட்டால் நமது ஒற்றுமை, கலை, நாகரிகம் யாவும் நாசம். ஆகவே தமிழைக் காப்பாற்றுங்கள் என்று பெரியாரின் தளபதியான அண்ணா அறைகூவல் விடுத்தார். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை முதலில் நுழைத்து, அதனைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தையும் திணித்து, தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.

உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான நான் இன்று (நேற்று) (பிப்ரவரி 25) இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியின் முன்னெடுப்பில், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பேரணியாகச் சென்று, ஒன்றிய அரசின் அலுவலகங்களின் முன்பாக, மும்மொழிக் கொள்கையையும் – இந்தித் திணிப்பையும் – யு.ஜி.சி. விதிமுறைகள் திருத்தத்தையும் எதிர்த்து கண்டன முழக்கமிட்டுஆர்ப்பாட்டம் நடத்திய செய்திகளை தொலைக்காட்சிகள் வாயிலாகப் பார்க்க முடிந்தது. ஆதிக்க இந்திக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்திருக்கிறது தமிழ்நாட்டின் மாணவப் பட்டாளம்.

இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், 1937ல் தொடங்கி 1939 வரை நடந்த முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில், தமிழைக் காப்பதற்காக சிறைக் கொடுமைக்குள்ளாகி, உடல்நலிவுற்ற நிலையிலும் மன்னிப்பு கேட்க மறுத்து, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம். சட்டத்தின் முன்பும் நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம்.

இருமொழிக் கொள்கையால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு, சிறப்பான வேலைவாய்ப்புகள் எனத்தமிழ்நாடு இன்று உயர்ந்து நிற்கிறது. தாழ்ந்த தமிழகத்தை நிமிர்த்தி உயர்த்தியது திராவிட இயக்கம். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வஞ்சகத்தைத் தொடர்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம். வஞ்சகத்தை எதிர்த்திடவும், வளமான தமிழ்நாட்டைப் பாதுகாத்திடவும், மாநில உரிமைக்கான குரலுடன் தாய்மொழி காத்திடும் முழக்கத்தையும் முன்னிறுத்துவோம். ஆதிக்க மொழியால் இந்திய மொழிகள் பல அழிக்கப்பட்ட வரலாற்றைப் பார்ப்போம். என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து