முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin-a 2024-11-25

Source: provided

சென்னை: பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்று தான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கேள்வி: தலைவர், முதல்வர். இப்போது அப்பா என்று அழைக்கிறார்களே?

பதில்: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், "தலைவர்" என்று அழைக்கிறார்கள். முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், "முதல்வர்" என்றும் அழைக்கிறார்கள்... இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை "அப்பா" என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால், இந்த "அப்பா" என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது.

கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது... தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

பதில்: தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை. பெயர்கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு மத்திய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு மத்திய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது; நாமும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம். இதில், நம்முடைய உரிமையைக் கேட்பதையே "அற்பசிந்தனை" என்று மத்திய மந்திரி சொல்கிறார். மத்திய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.

கேள்வி: கல்வி... குறிப்பாகப் பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள். நிறைய திட்டங்களையும் அறிவிக்கிறீர்கள்... இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தைஉணர்ந்திருக்கிறீர்கள்?

பதில்: நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து கல்விக்காக நிறைய செய்து கொண்டு இருக்கிறோம். "கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருவரின் கல்வி அவரின் தலைமுறையையே முன்னேற்றிவிடும்" என்று தொடர்ந்துமாணவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று, நிறைய திட்டங்களைச் செய்கிறோம்.

குறிப்பாகப்பெண்களுக்குக் கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்று ஏராளமான திட்டங்களைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் ஏராளமானவர்கள் பயனடைந்து கொண்டு இருக்கிறார்கள். பயனடைந்த பலர் பேசும் வீடியோக்களை நீங்களேகூட பார்த்திருப்பீர்கள். இந்த திட்டங்களால் முன்னேறியவர்கள், எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள். அதேபோல, நான் கொடுக்கும் பணி நியமன ஆணைகள் பெரும்பாலும் பெண்களுக்கானதாக இருப்பதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். கல்விக்காக இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா?

பதில்: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான். 2019-ல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.

கேள்வி: டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் ஏற்கனவே சொன்னதுதான்... பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான். நாம் "கள்ளக் கூட்டணி" என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான். இதையெல்லாம் பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.

கேள்வி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிறைய செய்திகள் இப்போது வருகிறதே...

பதில்: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டமன்றத்தில் நானே சட்டம் கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம்; விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம். பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், அவர்கள் வீட்டில் இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

கேள்வி: சோஷியல் மீடியா எல்லாம் பார்ப்பீர்களா?

பதில்: ஓய்வு நேரங்களில் பார்ப்பதுண்டு... செய்திகளைவிட மக்களின்'கமெண்ட்ஸ்' என்ன என்று பார்ப்பேன்... தீயவற்றை விலக்கிவிட்டு நல்லதை எடுத்துக் கொள்வேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால்அதைத் தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பேன்.

பொதுவாக, சோஷியல் மீடியாக்களில் நிறைய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன. நிறைய பேர் ஓட்டல்களுக்குச் சென்று, 'புட் ரிவ்யூ' போடுகிறார்கள். இளம் தலைமுறையினர், புட்-க்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே பிட்னசுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: வெளி மாவட்டப் பயணங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: அரசு நிகழ்ச்சிகளிலும், கழக நிகழ்ச்சிகளிலும் மட்டும் கலந்துகொண்டோமா என்று இந்தப் பயணங்கள் இல்லை. எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும், அந்தப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என்று அனைவரையும் சந்தித்துப் பேசுகிறேன். என்னைச் சந்திக்கும்போது, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் என்னிடம் உரிமையோடு பேசுகிறார்கள். "மக்களுக்கான அரசாக உங்கள் அரசு இருக்கிறது" என்று சொல்கிறார்கள். நம்முடைய குறைகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கையுடன் மனுக்களைக் கொடுக்கிறார்கள்.

கூடுமானவரைக்கும் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண்கிறோம். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஏன் அதைசெய்ய முடியவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும், தேவைகளையும் செய்து கொடுக்கிறோம். மொத்தத்தில், இந்த வெளி மாவட்டப் பயணங்கள் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், புதிய எனர்ஜியைத் தருகிறது.

கேள்வி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அறிவித்திருக்கிறார்களே?

பதில்: மிகவும் காலதாமதமான முடிவு இது. அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் அவராகப் பதவி விலகவில்லை. வேறுவழியில்லாமல் பதவி விலகியிருக்கிறார். இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் பற்றி எரிந்தது. 220 பேருக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். மாநிலத்தின் முதல்-மந்திரி மேல் நடவடிக்கை எடுக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

நடந்த வன்முறையின் பின்னணியில் மாநில முதல்-மந்திரியே சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று, இப்போது அவர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றிவிசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள். இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருக்கிறார்கள்.

பா.ஜக. ஆளும் மணிப்பூராக இருந்தாலும், உத்தர பிரதேசமாக இருந்தாலும் இந்த அளவில்தான் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் அடுத்த மாநிலத்தைபற்றிக் கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். நம்மை பொருத்தவரை, மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களைக் காக்கும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து