முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது: தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு : அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

புதன்கிழமை, 5 மார்ச் 2025      தமிழகம்
CM-2 2025-03-05

Source: provided

சென்னை : 30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது என்றும் தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்றும் மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டன.

மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும், தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக, தமாகா தவிர 56 கட்சிகள் பங்கேற்றன. மதிமுக சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், விசிக சார்பில் திருமாவளவன், இடதுசாரிகள் சார்பில் முத்தரசன், பெ.சண்முகம், மநீம சார்பில் கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, “தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தில் மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ள மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம். அதனால் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் நிலையில் உள்ளோம்.

இந்த விவகாரத்தில் கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் இணைய வேண்டும். தொகுதி மறுவரையறை நடவடிக்கையினால் தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைப்பது நம் குரலை நசுக்கும் முயற்சி. இது அரசியல் பிரதிநிதித்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். இந்த சதியை நாம் முறியடிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை என்ற கத்தி, தென்மாநிலங்களின் தலைக்கு மேல் உள்ளது” என பேசினார்.

கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானம்: தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்க்கிறது. இது நியாயமற்ற செயல். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகள் தொடர வேண்டும். தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும். மக்களவை தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும். இதற்கான உறுதியை பிரதமர் அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து