முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது: நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      தமிழகம்
Vijay 2024-10-26

Source: provided

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சி த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், மாநாட்டில்  சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய அரசியல் கட்சி...

திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.

100 அடி கொடிக்கம்பம்...

இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன. மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று முன்தினம் காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினர். 

10 நிமிடங்கள் ஆகும்...

இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விஜய், ரிமோட் மூலம் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொடியேற்றினாலே, அந்த கொடி உச்சத்தை தொடுவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். இடி தாங்கி வசதியுடன் இந்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

700 கேமராக்கள்...

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மாலையுடன் அத்தனை பணிகளும் முடிக்கப்பட்டன.

மாலை 4 மணிக்கு...

இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார். கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்'(நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.

கலை நிகழ்ச்சிகள்...

மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். அதன் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பேச உள்ளனர். இவர்கள் பேசி முடித்ததும் மாநாட்டின் நிறைவாக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், அங்கு திரண்டு இருக்கும் தொண்டர்கள் மத்தியில் தனது அரசியல் பேச்சை பேச உள்ளார். 

வரவேற்பு பதாகைகள்... 

மாநாட்டுக்கு விஜய்யை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வாழ்த்து பதாகைகளை வழிநெடுக வைத்துள்ளனர். குறிப்பாக சென்னை-திருச்சி மார்க்கத்தில் வி.சாலை வரைக்கும் சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வி.சாலை பகுதியே எங்கும் மஞ்சள், சிவப்பு கொடியுமாக காட்சி தந்து வண்ணமயமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே மாநாட்டு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 

நடிகர் விஜய் ரசிகர்கள்....

இதற்கு வடக்கு மண்டல ஐ.ஜி.அஷ்ராகார்க் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என்று போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இன்று மாநாடு நடைபெற உள்ளநிலையில் விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தமிழக வெற்றிக் கழகம், தளபதி விஜய் என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து