முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதல் பணியாக இருக்க வேண்டும்: காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
CM-2-2024-11-27

சென்னை, குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கஷ்டப்பட்டு பணி பெற்றவர்கள், கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு என்றும் காவலர்களுக்கு சட்டம்தான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (நவ.27) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள் 2,599 பேர்(ஆண்கள் 1819, பெண்கள் 780), சிறைத்துறை காவலர்கள் 86 பேர்(ஆண்கள் 83, பெண்கள் 3)மற்றும் தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு 674 பேர் என தேர்வு செய்யப்பட்டுள்ள 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மீதமுள்ள 2359 பேர்களுக்கும் அவர்கள் சார்ந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு, மாவட்டங்கள், சரகங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள அந்தந்த காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களில் சிறைத்துறை காவலர்களுக்கு டிசம்பர் 2 முதல் திருச்சியில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்திலும், இரண்டாம் நிலை காவலர்களுக்கு டிசம்பர் 4 முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தேர்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது., 165 ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க தமிழ்நாடு காவல்துறையில், நீங்கள் எல்லோரும் அடியெடுத்து வைக்கிறீர்கள். அதற்காக முதலில் என்னுடைய வாழ்த்துகள். நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் அரசாக, நேர்மையாக, திறமையாக செயல்பட்டு மக்களைக் காப்பாற்றும், காவல்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்திருக்கிறது.

அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் மறுக்கமுடியாது. காவல்துறையை மேம்படுத்துவதற்காக காவலர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்துதரவும் முதன்முதலாக காவல் ஆணையம் அமைத்ததுடன், அதிகமான எண்ணிக்கையில் காவல் ஆணையங்களை அமைத்து, பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசுதான். காவல்துறையைப் பொறுத்தவரை பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்கும் ஒரு துறை! அப்படிப்பட்ட துறையில் பணியாற்றவேண்டும் என்று நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த இடம் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை.

காவலராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல இலட்சம் பேர்களிலிருந்து, நீங்கள் மூன்றாயிரத்து 359 பேர், இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.அப்படிப்பட்ட உங்களுக்கும், உங்களுடைய இந்த வெற்றிக்கு துணை நின்ற குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மனமார தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கஷ்டப்பட்டு வந்திருக்கும் நீங்கள் மக்களுடைய கஷ்டங்களை தீர்க்க பாடுபடவேண்டும்.புதிதாக தமிழ்நாடு காவல்துறையில் இணைந்திருக்கும், உங்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கிறது.

சட்டம-ஒழுங்கை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன என்றால், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தச் சமூகக் குற்றங்களை களைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமூக நோய்கள் உங்களை தாக்காமல் தற்காத்துக்கொள்வதும் முக்கியம்.

உங்களுக்கு, சமூகநீதிப் பார்வையும் மதச்சார்பின்மையும் நிச்சயம் முக்கியம். சாதி பாகுபாடு பார்க்கக் கூடாது. அனைவருக்கும் பொதுவான நிலையில் இருந்து நீங்கள் பணியாற்றவேண்டும். உங்களுக்கு சட்டம்தான் முக்கியம். பிரச்னை என்று உங்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். உங்களின் பேச்சும், நீங்கள் நடந்துக்கொள்வதிலும் தான், நம்முடைய பிரச்னை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உருவாக்கும்.

கடைநிலை காவலர்களிடம் கூட உயரதிகாரிகள் நண்பர்களாக இருக்க வேண்டும்.ஒரு குடும்பமாக அன்போடும் அரவணைப்போடும் இருக்க வேண்டும். குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும். மக்களுக்கு உங்கள் மீது பயம் இருக்கக் கூடாது, மரியாதைதான் இருக்க வேண்டும். குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை; குற்றங்களே இல்லை என்று சொல்வதுதான் சாதனை! குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை; குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று சொல்வதுதான் நம்முடைய சாதனையாக இருக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து