முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னை தமிழ் மொழியை காப்பேன் : பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியைக் காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது.

ஒரு மாநிலத்தில் பல வகையான பாடத் திட்டங்களைப் பின்பற்றக்கூடிய பள்ளிகள் உண்டு. எந்த வகைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதனை இன்று பஞ்சாப்பும், தெலங்கானாவும் உணர்ந்து உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் என சட்டமாக நிறைவேற்றியவர் கருணாநிதி.

1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு, இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிட முன்வந்தது. 1968 ஜனவரி 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை முதல்வர் அண்ணா கூட்டினார். “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ்–ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தியை அறவே நீக்கிவிட இப்பேரவை தீர்மானிக்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலத்திற்குரிய சட்டவழியிலான உரிமையை மிகச் சரியாகக் கையாண்டு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய பேரறிஞர் அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன்.

இனி டெல்லி தன்னால் ஆனதை செய்து கொள்ளட்டும் என்று அறைகூவல் விடுத்தார். மத்திய பா.ஜ.க. அரசு எப்படியாவது தமிழை அழித்து, இந்தி–சமஸ்கிருதத்தைத் திணிக்கலாம் என முயற்சிக்கிறது. அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஆயுதமாகவும் கேடயமாகவும் தமிழைக் காத்து நிற்கிறது. எப்போதெல்லாம் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் எல்லைப்புறமாகவோ, கொல்லைப்புறம் வழியாகவோ நுழைய முயல்கிறதோ, அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் விழிப்புணர்வுடன் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது.

மொழிக்காக, நம்முடைய இனத்திற்காகப் போராடுகிறோம். போராடுகிற இந்த நேரத்தில், நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அந்த நான்கு ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அதுவும் மொழிக்காக, ஒரு இனத்திற்காக, தனயனை இழந்த தந்தை என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்.

அத்தகைய பாராட்டை, பெருமையை வாங்கித் தந்த மகிழ்ச்சியும் என்னைச் சேருமல்லவா? எனவேதான் நான் சொல்கிறேன். எத்தகைய தியாகத்தைச் செய்வதற்கும் தயார்.. தயார்..” – என்று நான் முழங்கினேன். பெரியார் மூட்டிய தீயை, அண்ணா திக்கெட்டும் பரவச் செய்தார். தண்டவாளத்தில் தலை வைத்து தமிழைக் காத்தார் கருணாநிதி. அவர்களின் வழியில்தான் நம் கழகம் என்றும் பயணிக்கும்.

உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம்–மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து