முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-03-30

சென்னை, வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- முன்னெச்சரிக்கை என்பது இருந்தாலே, எந்தப் பாதிப்பையும் நாம் தடுத்திட முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழை கிடைக்கிறது. முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்து கொண்டிருந்தது.

சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், சில நாட்களிலேயே மழை மொத்தமாகப் பெய்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சில மணி நேரங்களிலேயே பருவகாலத்திற்கான, மொத்த மழையும் கொட்டி தீர்த்து விடுகிறது. இதனை எதிர்கொள்வது தான் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள்.

பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், நமது அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக வானிலைத் தரவுகளை உடனுக்குடன் வழங்க கடந்த 22.08.2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை நான் திறந்து வைத்தேன். இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தால் அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும் என்பதால்தான் ஒரு முக்கியமான செயலியை உருவாக்கி இருக்கிறோம்.

வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு 'TN Alert' என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள் தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.

வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன் கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம். இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழையால் ஏற்படும் சேதங்களை கையாள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும்.

மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான எந்திரங்கள், மீட்பு பணிகளுக்கான படகுகள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். சென்னையில் மழை வெள்ளத்தை தடுக்க அடையாறு, கூவம் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

TN Alert - மொபைல் செயலி 

வானிலை நிலவரம் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது கிடைத்தால், அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட வசதியாக இருக்கும். அதற்காகத்தான் ஒரு முக்கியமான செயலியை உருவாக்கியிருக்கிறோம். வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழையளவு, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, உள்ளிட்ட விவரங்களை தமிழிலேயே தெரிந்துகொள்ளக் கூடிய வகையில், தமிழ்நாடு அரசு TN Alert எனும், மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து