முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசாநாயக்க: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      உலகம்
Sri-Lanka 2024-03-23

கொழும்பு, இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுரா குமார திசாநாயக்க, நேற்று (செப். 23) காலை அதிபர் செயலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9-வது அதிபராக பதவியேற்றார். இதையடுத்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இலங்கைக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி சகாப்தத்தை உருவாக்குவதற்கான உங்கள் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். அதற்கான உங்கள் கூட்டுப் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் அனுரா குமார திசாநாயக்க-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் கடல்சார் தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுரா குமார திசாநாயக்க-வுக்கு வாழ்த்துகள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுரா குமார திசாநாயக்க-வுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகள் பழமையான பன்முக ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. நமது பிராந்தியத்தின் நலனுக்காக நமது உறவுகளையும் பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகளையும் வலுப்படுத்த இந்திய மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றியை அடுத்து அனுரா குமார திசாநாயக்கவை, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுரா குமார திசாநாயக்கவுக்கு இந்திய தலைவர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. நாகரீக இரட்டையர்களான இந்தியாவும் இலங்கையும் நமது இரு நாட்டு மக்களின் செழுமைக்காக உறவுகளை மேலும் ஆழப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள அனுரா குமார திசாநாயக்க, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன். நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் தலைவரான அநுர குமார திசாநாயக்க, “பல நூற்றாண்டு நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பு நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி இலங்கையை படைப்போம்” என தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து