முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
chennai-H-C 2024-12-28

Source: provided

சென்னை: புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் என்று சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நேற்று முன்தினம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு மாவுக்கட்டு போடுவதால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. இதுபோல மாவுக்கட்டு போடும் வேலை எல்லாம் பிற துறைகளில் நடப்பது இல்லை. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை நேற்று (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? அதற்கு யார் பொறுப்பு? இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறி வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். பின்னர் ஐ.பி.சி-ல் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எப்.ஐ.ஆர் வெளியாகிவிட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான எப்.ஐ.ஆர் தானாகவே லாக் ஆகிவிடும். ஆனால் சிட்டிசன் போர்ட்டலில் 14 பேர் ஓ.டி.பி.யை பயன்படுத்தி எப்.ஐ.ஆர்-ஐ பார்த்துள்ளனர். அந்த 14 பேரின் விவரங்களும் உள்ளன. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது; புகார் அளிக்க வந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறும்போது, ஒரு காவல்துறை அதிகாரி கூட உதவி செய்ய முடியாதா? . பாதிக்கப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில் தான் முதல் தகவல் அறிக்கை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி கூறியதாவது:- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளது; காவல்துறை கசியவிடவில்லை. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாப்பது காவல்துறையின் பொறுப்பு; பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது. தொழில்நுட்பக் கோளாறுக்கு என்.ஐ.சி-தான் பொறுப்பு.

இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை. தொடர் விசாரணையில்தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். குற்றவாளி வேறு எதாவது மொபைல் வைத்திருந்தாரா என்பது குறித்ததும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் காவல் ஆணையர் பேட்டி கொடுத்தார். இதற்கு அரசு அனுமதி பெறவேண்டியதில்லை, இதுபோன்ற சமயங்களில் காவல்துறை அதிகாரிகள் பேட்டி அளிப்பது வழக்கம். அதற்கு எந்த தடையும் இல்லை. தனிப்பட்ட முறையில் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியாது. எவரையும் காவல்துறை பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் ஆணி வேர் வரை விசாரணை நடத்தப்படும். என்று வழக்கறிஞர் கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் எப்ஐஆர் பதிவேற்றம் செய்தவர்கள் யார் என அறியும் வசதி இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. 14 பேரிடம் விசாரணை நடத்தும் நிலையில் எப்ஐஆர் கசியவில்லை என எப்படி கூற முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் உள்ளது என்றும் யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து